அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

வாழத்தான், To Live and to Love

வாழத்தான்



தூக்குத் தண்டனை கைதி ஒருவனை ஆற்றங்கரை மரத்தின் கிளையில் தூக்கியேற்றி கொல்ல ஆரசன் திட்டமிட்டான். தூக்கு தண்டனை நிறைவேற்ற கைதியின் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டப்பட்டது. மூன்று எண்ணிய அடுத்த நொடி கைதியின் கழுத்தில் கயிறு இறுக வேண்டும் என்பது திட்டம். காவலாளி உரத்தக் குரலில் ஒன்று... இரண்டு சொன்னவுடன் கயிறு அறுந்து கைதி ஆற்றில் விழுந்து, நீந்தி அக்கரை கடந்து தப்பி ஓடினான். காவலர்கள் கைதியை விரட்டி ஓடினார்கள். காவலர்களால் கைதியினை விரட்டி பிடிக்கமுடியவில்லை. கைதி வீட்டிற்குச் சென்றான். வீட்டின் கதவு திறந்தது. கைதியின் மனைவி பிள்ளைகள் ஆனந்த முகத்துடன், தேவதைப் போன்று ஓடிவந்து கட்டித்தழுவி முத்தமிட்டனர்.

காவலாளி 'மூன்று.... என்று உரத்த குரலில் கத்தினான். வாழ்ந்துவிட வேண்டும் என்பதற்கான கைதியின் ஏக்கம் தவிப்பு துடிப்பு, கனவு அனைத்தும் கழுத்தை கயிறு இறுக்க இறுக்க கைதியோடு உயிரிழந்து போனது.

வாழ்ந்துவிட வேண்டும் என்ற தவிப்பு, துடிப்பு எல்லா உயிரினங்களுக்கும் உரிய பண்பு, நிலத்தினுள் புதைந்துப்போன விதை, கடினமான மண் தரையையும் பிளந்துக் கொண்டு மேல் எழும் காட்சி வாழ்வதற்கான தவிப்பை வெளிப்படுத்துகின்றது. முட்டைக்குள் முடங்கிப்போய்விடாமல் ஓட்டை உடைத்துக் கொண்டு, வெளிவரும் பறவை இனங்கள் உலகில் வாழ்ந்துவிட வேண்டும்; என்ற துடிப்பை பிரதிபலிக்கின்றது.

வாழ்ந்துவிட வேண்டும் என்ற துடிப்பும், தவிப்பும் தான் இயற்கையாகவே மனிதனையே இயக்குகின்றது. உயிர் வாழ்ந்துவிட வேண்டும் என்ற ஏக்கத்தினால்தான் கத்தி முனையில் திருடன் மிரட்டும்போது கேட்பதை எல்லாம் கொடுத்துவிட்டு பரிதாபமாக நிற்கின்ற நிலை ஏற்படுகின்றது.

எப்படியாவது நான் வாழ்ந்துவிட வேண்டும் என்ற மனநிலை பலரை எளிதில் வீழ்த்தி விடுகின்றது. பிறர் வாழ நான் இப்படித்தான் வாழவேண்டும் என்ற கொள்கைக் கொண்டவர்கள் வீழ்ந்துக் கிடந்தாலும் எழுந்து நிமிர்ந்து நிற்கின்றனர்.