கடின உழைப்பிற்கு...
பீகாரில் கயா மாவட்டத்தின் கெலார் என்ற கிராமத்தைச் சேர்ந்த தசரத் மான்ஜி ஒரு நிலமில்லாத விவசாய கூலி. தாழ்த்தப்பட்ட சாதிகளில் கடைநிலை சாதியான முசாகர் சாதியில் பிறந்தவர். 1959 ஆம் ஆண்டில் தன் 24 ஆம் வயதில் ஒரு நாள் அவரது அன்பு மனைவி வீட்டிற்கு அருகில் இருந்த மலையின் மறுபுறமிருந்து குடிக்கத் தண்ணீர் கொண்டு வரும்போது தவறி விழுந்து படுகாயமடைந்தாள். மலையைச் சுற்றிக் கொண்டு மருத்துவமனைக்குக் கூட்டிச் சேர்க்குமுன்பே மனைவி இறந்துபோனாள். இந்த மலையின் குறுக்கே ஒரு பாதை மட்டும் இருந்திருந்தால் தன் மனைவி இறந்துபோயிருக்கமாட்டாள் என்று உறுதியாக நம்பினார் தசரத் மான்ஜி. இனிமேல் இதேபோன்ற ஒரு அவல நிலை எந்த மனிதனுக்கும் வரக்கூடாது என்று தீர்க்கமாக முடிவெடுத்தார்.இந்த மலையின் குறுக்கே ஒரு பாதை உண்டுபண்ணுவதே தன் இலட்சியம் எனக் கொண்டார். இதனால் தன் கிராம மக்களுக்கு உதவி செய்யமுடியும் என்று உணர்ந்தார். அவருடைய எண்ணம் எல்லாம் மலையைச் சுற்றியே வட்டமிட்டது. மலையின் குறுக்கே பாதை என்பதுதான் அவருடைய உயிர் மூச்சாக இருந்தது. 25 அடி உயரம், 30 அடி அகலம், 360 அடி நீளத்திற்கு ஒரு பாதையை உருவாக்கும் வரை அவரது இலட்சியக் கனல் ஓயவில்லை. 'மலையை உடைக்கப்போகின்றேன்' என்று கையில் உளியையும் சுத்தியலையும் எடுத்த தசரத்தை வரலாறு படைக்கப்போகின்ற மனிதன் என்று யாரும் போற்றவில்லை. மாறாக பைத்தியக்காரன் என்றுதான் பழித்தார்கள். இயலாமையை கண்முன் கொண்;டுவந்தார்கள் மக்கள். பாதையைக் கண் முன் வைத்தார் தசரத். 22 ஆண்டுகள் தவமிருந்து செதுக்கி அந்த பறைக்குள் இருந்த பாதையை வடித்தார் தசரத் என்ற சிற்பி. அன்று 50 கி.மீ தூரம் மலையைச் சுற்றிக் கொண்டு வந்த 60 கிராமத்தை சார்ந்த மக்கள் இன்று பத்தே கிலோமீட்டரில் நகரத்தை அடைகின்றனர்.