அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

அவமானங்களை ஆயுதமாக்கு!

அவமானங்களை ஆயுதமாக்கு!
 
லண்டன் நகரில் வாழ்ந்துவந்த ஹென்னா என்பவர் மது மற்றும் கேளிக்கை விடுதி ஒன்றில் பாடல் பாடி நடனம் ஆடுபவராக இருந்தார். கணவனின் பொறுப்பற்ற தன்மையினால் குடும்பம் சீர்குலைந்திருந்தது. ஒரு நாள் கேளிக்கை விடுதியில் ஹென்னா பாடிக்கொண்டிருக்கும் போது அவளுடைய தொண்டையில் ஏற்பட்ட பிரச்சினையினால் பாடல் கேலிகூத்தாகியது. எல்லோரும் சிரித்தார்கள். ஹென்னா அவமானத்தால் அழுதாள். ஒரே கூச்சல், குழப்பம். ஹென்னா அவமானத்தால் மேடையிலிருந்து இறங்க அவருடைய ஆறு வயது மகன் மேடை ஏறினான். தன் இளம் குரலினால் பாடி, பிஞ்சு கால்களினால் ஆடி அங்கு இருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினான். இவனுடைய கேளிக்கை விருந்தை அனைவரும் ரசித்தனர். கைத்தட்டலால் அரங்கமே அதிர்ந்தது. சில்லரை காசுகளை அவன் மேல் வீசி எறிந்தனர். சில்லரையை வேகமாகப் பொறுக்கினான் அந்தச் சிறுவன். எல்லோரும் அவனைப் பாட வற்புறுத்தினர். 'ஒரே நேரத்தில் இரண்டு வேலையைச் செய்யமுடியாது' என்று கூறி அனைவரையும் நகைச்சுவையில் ஆழ்த்தினான். இதுவே உலகம் போற்றும் ஒரு மாமனிதனின் முதல் கருவறை. இந்தச் சிறுவன் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தன் தாய் வயிற்றில் கருவானான். இன்று தன் தாய் பட்ட அவமானத்தால் உருவானான்;. அவமானங்கள் நம்மை அழுத்தி, நம் வாழ்வையே சூனியமாக்கும் என்பதை உணர்ந்து அவமானத்தையும் ஆயுதமாக மாற்றிய இவன்தான் இன்று உலகம் போற்றும் அழியா நகைச்சுவை வேந்தன் சார்லி சாப்ளின்.

11 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் தற்கொலை விகிதம் கடந்த பத்தாண்டுகளில் 15 முதல் 25 மடங்கு அதிகரித்துள்ளது. தேர்வில் தோற்றுப்போய்வி;ட்டால், தான் கேட்டதைப் பெற்றோர்கள் வாங்கித்தரவில்லை என்றால், தான் ஒருதலையாக விரும்பிய பெண் தன் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், பெற்றோர் அல்லது ஆசிரியர் திட்டிவிட்டால் இள வயதுடைய மாணவர்கள் எளிதாக அவமானப்பட்டவர்களாய் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தச் செய்திகளை அன்றாட செய்தித்தாள்கள் நமக்கு சுமந்து வருகின்றன. மொத்தத்தில் வலியையோ, தோல்வியையோ தாங்கிக்கொள்வதற்கும் அதனைக் கடந்து வருவதற்கும் நம் மாணவர்கள் தங்களை தயாரித்துக்கொள்ளவில்லை.

தற்கொலை எண்ணங்கள் வருவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
1.    தன்னம்பிக்கையின்மை
2.    மன அழுத்தம்

தன்னம்பிக்கை இல்லாத மாணவர்கள் எளிதாகத் தற்கொலை செய்துகொள்கின்றனர். தன்னம்பிக்கையின்மை என்பது தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாக அமைகின்றது. தன்னைப் பற்றி தனக்கே ஒரு நல்ல பார்வை இல்லை என்பதை இது எடுத்துக்காட்டுகின்றது. தன்னம்பிக்கையில் வளருகின்ற மனிதர்கள் அவமானங்களை கூட ஆயுதங்களாக பயன்படுத்தி வளரமுடியாத சூழ்நிலையில் கூட வாழ்ந்துகாட்டிவிடுகின்றனர்.

தற்கொலை செய்துகொள்பவர்கள் மனஅழுத்தத்தின் உச்சிக்குச் செல்வதால் அவர்களால் நிதானமாச் சிந்திக்கமுடியாமல் போய்விடுகின்றது. ஒரு நிமிட வேதனைக்காகப் பல ஆண்டு வாழ்க்கையை மாய்த்துக்கொள்கின்றனர். மன அழுத்தத்தில் இருந்து விடு;பட நண்பர்களிடமோ அல்லது பெற்றோரிடமோ தங்கள் உள்ளுணர்வுகளைப் பகிர்ந்துக்கொள்ள வேண்டும். மன அழுத்தம் குறைய குறைய தற்கொலை எண்ணம் குறைகின்றது.

தன்னம்பிக்கையே வாழ்க்கை. தன்னம்பிக்கையை இழப்பது என்பது பறந்தால் மட்டுமே வாழ்வு என்றிருக்கும் பறவை தன் சிறகுகளை இழப்பது போன்றது. அவமானங்களே ஒருவனை செதுக்குகின்றது எனில் அந்த அவமானங்களைக் கண்டு கலங்கவேண்டாம்.