பொங்கவேண்டியது நம் வீட்டு பானைகள் மட்டும் அல்ல நம் உணர்வுகளும் எண்ணங்களும்...
தைப் பிறந்தால் வழிப் பிறக்கும் என்பார்கள். தமிழர் தமிழ் புத்தாண்டை இன்று சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றனர். கல் தோன்றி மண் தோன்றா முன்பே தோன்றிய குடி தமிழ் குடி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தமிழனின் பெருமையும் புகழையும் உலகமே அறியும். 100 நாடுகளுக்கு மேலாக பரவிக் கிடக்கின்றான் தமிழன் ஆனால் தமிழனுக்கென்று தனி நாடு இல்லை என்பது வேதனைத் தருகின்றது.
தமிழ் என்றுச் சொல்லி செம்மொழி மாநாடுகளெல்லாம் நடத்தி பெருமை சேர்த்த தமிழன் மறுபுறம் தன்னை தமிழன் என்று சொல்லிக்கொள்வதற்கே தலை குனிந்துக்கொள்ளுகின்றான்.
தனக்கு பிறந்த குழந்தை அம்மா என்று அமிர்த மொழி பேசுவதை கேட்டு மகிழாமல் ஆங்கில மொழியில் மம்மி என்று பேசுவதை கேட்பதிலேயே மயங்கிக் கிடக்கின்றான் தமிழன்.
எனவே தான் தனக்கு அருகிலேயே தாய் மொழி வழிக் கல்வி இருக்க ஆங்கியல் படிக்க நெடும்பயணம் மேற்கொள்கின்றான் தமிழன்.
நாம் வாங்கும் உணவுப் பொருட்களில் மருந்துப் பொருள்களில் கலப்படம் என்றால் வெகுண்டு எழுகின்றோம் ஆனால் நாம் பேசும் மொழியில் கலப்படம் என்றால் அதனை நாகரிகம் என்று மழுப்புகின்றோம்.
தமிழ் மொழியின் பாடு இப்படியிருக்க தமிழர்களின் பாடோ அதோகதிதான். இலவச கலாச்சாரம் அவன் கண்ணை கட்டிப்போட்டுள்ளது. டாஸ்மார்க் பண்பாடு கோடிக் கணக்கில் அரசுக்கு வருமானத்தையும் தெருக்கோடியில் அவனுக்கு படுக்கையையும் அமைத்துக் கொடுக்கின்றது.
மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்பது போல தழிழர்கள் என்றால் ஒரு நீதியும் தமிழர் அல்லாதவர்கள் என்றால் வேறு நீதியும் செயல் படுவதை காண முடிகின்றது.
காவேரிக்கும் முல்லை பெரியாருக்கும் கைஏந்தி நிற்கும் அவல நிலையில் தமிழ் விவசாய்கள் நிற்கின்றனர். தானும் விவசாயம் செய்ய வழியில்லாமல் உணவுப் பொருட்களை வாங்கி உண்ணவும் முடியாமல் விலைவாசி உயர்வாலும் கடன் பிரச்சினையாலும் தற்கொலை செய்துக்கொள்ளும் விவசாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றது.
விவசாயம் தான் அப்படி என்றால் கடல் தொழில் செய்யும் கடலோடிகளின் கதி ஆதோ கதியாகத்தான் இருக்கின்றது.
ஆஸ்திரேலியாவில் வடநாட்டவர் ஒருவர் தாக்கப்பட்டால் இந்திய அரசே கொதித்தெழுகின்றது. ஆனால் நமது இராமேஸ்வரத்தில் தினம் தினம் இலங்கை கடற்படையினரரால் பாதிக்கப்படுகின்ற தமிழ் மீனவர்களின் அவல குழுரல்கள் கடல் அலைசத்தத்தோடேயே கலந்துக் கிடக்கின்றது.
இலங்கை சிறையிலும் கத்தார் சிறையிலும் மாறி மாறி சிறை வாசம் செய்யும் தமிழ் மீனவர்களின் சிறைவாசம் தாய் மண்ணிற்கு வந்தப்பிறகும் தொடர்கதையாகிப் போவதை பார்க்க முடிகின்றது.
தமிழக் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா! என்னும் வார்த்தை ஜாலங்கள் பொய்த்துப் போய் தழிழன் தலைநிமிர்ந்து விடக்கூடாது என்னும் போக்கு தான் தலைநிமிர்ந்து நிற்க்கின்றது.
அன்னியர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து நின்று போரிட்டதால் இந்திய விடுதலைப் பெற்றது. இன்று தமிழர்களின் பகுதியில் வாழ்வது தமிழர்கள் என்றாலும் காலம்காலமாக ஆழ்வது அன்னியர்களே.
இன்று தெலுங்கானா பிரச்சினை என்றால் அப்பகுதியைச் சேர்ந்த எல்லா கட்சி அரசியல் தலைவர்களும் எல்லா சாதிய மக்களும் தனி தெலுங்கானா எனும் ஒரே ழுழக்கத்துடன் அணித்திரண்டு நிற்கின்றனர்.
கொத்துக் கொத்தாய் தமிழர்கள் ஈழத்தில் அழிக்கப்பட்டாலும், ராமேஸ்வரத்து மீனவர்கள் சுடப்பட்டாலும், சாதியின் பெயரால் சமயத்தின் பெயரால் அரசியல் கட்சிகளின் பெயரால் நாம் பிளவுப்பட்டுக்கிடக்கின்றோம். மறுத்த இதயம் படைத்த மக்கள் நாமாகிப்போனோம்.
மீனவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் நமக்கு என்ன என்று விவசாய மக்களும், விவசாய்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் நமக்கு என்ன என்று மீனவர்களும் ஒதுங்கிக் கொள்வதனால் நம்மை ஏமாற்றி பிழைப்பவனே வெற்றி பெறுகின்றான். பிளவுப்பட்டுக்;கிடக்கும் வரை பிளவுப்படுத்துபவனுக்கே கொண்டாட்டம்.
இன்று பொங்கவேண்டியது நம் வீட்டு பானைகள் மட்டும் அல்ல நம் உணர்வுகளும் எண்ணங்களும்...