அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....
Search This Blog
Holiness, புனிதத்துவம்
புனிதத்துவம்
மரத்தின் கிளை ஒன்றில் சிட்டுக்குருவி ஒன்று அமர்ந்திருந்தது. கிளையின் ஒரு முனையில் பாம்பு ஒன்றும் மறுமுனையில் ஆந்தை ஒன்றும் சிட:டுக் குருவியை கொன்று தின்ன கங்கணம் கட்டிக் கொண்டன. இருதலைக் கொள்ளி எறும்பு போல பயத்தில் நடுங்கியது சிட்டுக்குருவி. இவ்வேளையில் குரல் ஒன்று உள்மனதிலிருந்து கேட்டது, 'சிட்டுக்குருவியே, சிட்டுக்குருவியே சிறகுகள் இருப்பது உனக்குத் தெரியாதா?'. சிட்டுக்குருவி சுதாரித்துக் கொண்டது. தனக்கு சிறகுகள் இருப்பதை உணர்ந்தது, சிறகை விரித்தது மகிழ்ச்சியோடு பறந்து சென்றது.
புனிதம் என்பது வெளியிலிருந்து என்னில் திணிக்கப்படுவது அன்று, மாறாக என்னில் புதைத்துக் கிடப்பது. புதைத்ததை தூசித்தட்டி பார்ப்பவன் புனிதனாகிறான். புதைத்ததை மென்மேலும் புதைப்பவன் மிருகமாகிறான். நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதனால் தூய்மை என்பதே நம் சாயல், புனிதம் என்பதே நம் அடையாளம்.
புனித வாழ்வு என்பது நான்கு சுவற்றுக்குள் அடங்கிக்கொண்டு செபம் செய்வதில் மட்டுமல்ல, சுவரே இல்லாமல் வாழும் மக்களுக்கு சுவராக இருப்பதிலும் அடங்கியுள்ளது.
செருப்பை பத்திரமாக கழற்றிவிட்டு ஆலயம் செல்வதில் மட்டுமல்ல செருப்பு அணிய காலே இல்லாத மக்களுக்கு தோள் கொடுப்பதில் அடங்கியுள்ளது. புனிதம் கோவிலுக்குள் மட்டுமல்ல குப்பை மேட்டிலும் உண்டு. சாமியார்களிடம் மட்டும் அல்ல. சம்சாரிகளிடம் உண்டு.
உன்னில் புனிதத்துவம் உண்டு. அதனை கண்டுணரும்போது நீ புனிதனாகின்றாய். பின்பு உன் புனிதத்துவம் இயல்பாகவே பிறரையும் புனிதர்;களாக மாற்றி விடும் ஆற்றல் பெற்றுவிடுகின்றது.
செயல்பாடில்லாத புனிதத்துவம் போலியானதே. புனிதத்துவம் என்னில் வெளிப்பட்டு பிறரில் பிரதிபலிப்பது. பிறரில் வெளிப்பட்டு என்னில் பிரதிபலிப்பது (என்னில் வெளிப்பாட்டு என்னில் பிரதிபலிப்பது அல்ல).
நீ புனிதனாக வாழ்கிறாய் என்பது உன்னில் அல்ல. உன்னைச் சுற்றியுள்ள சமுதாய அமைப்பில் அதன் ஒழுங்கு முறைகளில், விடுதலை வாழ்வின் வெளிப்பாட்டில் புரிந்து கொள்ளப்படுகின்றது.
நீ யார் என்பதை முகக்கண்ணாடி காட்டுவது போல உன் புனித வாழ்வை உன் சுற்றம் காட்டிக் கொடுத்துவிடும்.
Perspectives, பார்வைகள் பலவிதம்
பார்வைகள் பலவிதம்
வாழ்வின் வெற்றியும், தோல்வியும், மகிழ்ச்சியும் விரக்தியும் பார்க்கின்ற பார்வையில்தான் அடங்கியிருக்கி;னறது.
ஒரு குவளையில் பாதி அளவு தண்ணீர் இருக்கி;ன்றது. தாகத்தில் ஓடி வருகின்ற மனிதன், 'ச்ச... என்ன இது, தாகத்தில் ஓடி வந்தேன். பாதி அளவு தண்ணீர்தானே இருக்கின்றது', என்று சலித்துக் கொள்கின்றான். இதனை குறைப்பபார்வை எனலாம் (Pessimistic view). இந்த ரோஜா செடியில் இவ்வளவு முட்களா என்று புலம்புகிற மனநிலை இது.
அதே பாதி அளவு தண்ணீர் இருக்கி;ன்றது. அதே போல் தாகத்தில் ஓடிவரும் ஒரு மனிதன் 'ஆ...ஹா... நம்ம ஓடி வந்தது வீண் போகல. பாதி அளவு தண்ணீராவது இருக்கிறதே', என்று கூறி மகிழ்ச்சியில் பருகுகின்றான். இதனை நிறைப்பார்வை எனலாம் (Optomistic view). 'இந்த முட்செடியில் கூட இவ்வளவு அழகான ரோஜா பூக்களா'இ என்று பெருமிதம் கொள்கின்ற மனநிலை இது.
அதே பாதி அளவு தண்ணீர் களைப்பில் ஓடி வரும் வேறு ஒரு மனிதன், 'ஏன் இந்த குவளையில் பாதி தண்ணீர்தான் இருக்கி;ன்றது' என்று கேள்வி எழுப்புகின்றான். இதனை விமர்சனப் பார்வை எனலாம் (Critics’ view). ரோஜா செடியில் முட்கள் எதற்கு? என்கிற மனநிலை.
குறைப்பார்வை கொண்ட மனிதர்களுக்கு வண்ணப் புகைப்படம்கூட கருப்பு வெள்ளையில்தான் தெரியும். தன் மதிப்பீடுகள், திறமைகள் அனைத்தையும் குழி தோண்டி புதைத்துவிட்டு குறைப்பட்டுக் கொண்டே இருப்பவர்கள். நிறைப்பார்வை கொண்ட மனிதர்கள், வறுமையிலும் வளமையிலும் வாழப் பழகிக் கொண்டவர்கள் கருப்பு வெள்ளை புகைப்படத்தைக் கூட வண்ணப்படம் என்பார்கள்.
விமர்சனப் பார்வைக் கொண்ட மனிதர்கள், கன்னத்தில் ஒருவன் அடித்தால், என்னை ஏன் அடித்தாய் என கேட்பார்கள். வெளித்தோற்றத்தைக் கண்டு ஏமாறாமல் மெய்பொருள் ஆய்ந்து அறிபவர்கள்.
இத்தகைய பார்வைகளில்,
உண்;மை பார்வை உனக்கு தெரியும்போது பாதை தெளிகின்றது. புது பயணம் தொடர்கின்றது.
Live by all means, வாழ்ந்துவிடு
வாழ்ந்துவிடு
உயிருள்ள மனிதர்கள் எல்லோரும் வாழ்கின்றார்கள் என்று சொல்லிவிட முடியாது.
இந்திய நாட்டின் மக்கள் தொகை 110 கோடி என்றால் இதில் 50 சதவிகிதம் பேர் ஏதோ இருக்கின்றார்கள். 30 சதவிகிதம் பேர் இயங்குகிறார்கள். மற்றைய 20 சதவிகிதம் பேர் மட்டுமே வாழ்கி;ன்றவர்களாக இருக்கின்றனர்.
இருப்பது என்பது, வெறும் உயிர் வாழ்தல் இலட்சியமில்லாமல் (விலங்குகள்போல்) வாழ்வை அலட்சியப்படுத்துவது
இயங்குவது என்பது வேறு ஒருவர் சொல்லி, கட்டாயப்படுத்தி நாம் சில செயல்கள் செய்வது, இயந்திரங்கள் போல்.
வெற்றி என்பது வாழ்க்கை அல்ல, வெற்றிக்காக போராடுவது, இலட்சியத்தோடு காலத்தை வெல்வது தான் வாழ்க்கை.
இலட்சியம் வாழ்க்கையன்று வாழ்வில் ஏற்படுத்திக்கொண்ட காயங்கள் தான் வாழ்க்கை.
வாழ்பவன் பிறர் வாழ வழி செய்வான். வாழ்பவன் பிறருக்கு வழி ஆவான். வாழ்பவன் பிறர் வாழ வழிவிடுவான். எனவே நீயும் வாழ்ந்துவிடு
Contradiction; a virtue, முரண்பாடு
முரண்பாடு
வாழ்வின் முரண்பாடுகள் கூட முக்கியமானதாக கருதப்பட வேண்டும். ஏனெனில் முரண்பாடுகள் மோதிக்கொள்கின்றபோதுதான் உண்மை பிறக்க முடியும்.
தீக்குச்சி தீப்பெட்டி இந்த முரண்பாடுகளின் உரசல்தான் தீப்பொறியை பெற்றெடுக்கின்றது.
மனிதன் கூட முரண்பாடுகளின் பெட்டகம் என்று சொல்லலாம்.
அவனுடைய ஒரு பார்வை புண்படுத்துகின்றது. மற்றொரு பார்வை குணப்படுத்துகின்றது.
ஒரு வார்த்தை எரிக்கின்றது மற்றொரு வார்த்தை ஆற்றுப்படுத்துகின்றது.
ஒரு தொடுதல் வலிக்கின்றது. மற்றொரு தொடுதல் அணைக்கின்றது.
தோல்வி இல்லையெனில் வெற்றியில் பெருமை இல்லை.
இரவுகள் இல்லையெனில் வாழ்வின் சுவைகள் நாம் பெறுவதில்லை.
முதுமை இல்லையெனில் இளமையின் இனிமை நமக்குப் புரிவதில்லை.
சாவு இல்லையெனில் உயிரின் அவசியத்தை நாம் உணர்வதில்லை.
முரண்பாடுகள் நமக்கு வலியை அல்ல வாழ்வையே தருகின்றன.
The Cross, சிலுவை
சிலுவை
சிலுவை, கிறிஸ்தவத்தின் அச்சாணி, ஆணிவேர். சிலுவையின்றி கிறிஸ்தவம் இல்லை. பழைய ஏற்பாடு மரத்தின் கனியை உண்டவர்கள் மாண்டுபோனார்கள். புதிய ஏற்பாட்டுச் சிலுவை மரத்தின் கனியை உண்டவர்கள் நிறைவாழ்வு பெற்றவர்கள்.
சிலுவை உடன்படிக்கையின் அடையாளம், உடைக்கப்பட்டவர்களின் அடையாளம், அர்ப்பணத்தின் அடையாளம் நிபந்தனையற்ற அன்பின் அடையாளம், கிறிஸ்தவ அடையாளங்களுக்கெல்லாம் ஒரு அடையாளம்.
இத்தகைய மாண்புமிகு சிலுவை இன்று சிறை வைக்கப்படுகின்றது. சித்திரவதை செய்யப்படுகின்றது சிறுமைப்படுத்தப்படுகின்றது என்பது தான் உண்மை.
எப்படியும் வாழலாம் என்பதை விடுத்து இப்படித்தான் வாழவேண்டும் என்று சொல்லித்தரும் சிலுவை இன்று எப்படியும் வாழலாம் என்பவர்களின் கழுத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கின்றது.
திருடர்களும், தீவிரவாதிகளும், தீயவர்களும் சிலுவையின் மேன்மை அறியாது அணிந்து வரும் அவமான சின்னமாகிப் போனது.
புழுதியில் புரள்பவர்களுக்கு புகலிடம் தேடித்தரும் புரட்சி சிலுவை இன்று பாப் நடனமாடி, கிராப் முடி திருத்தி, கேட் வாக்கிங் செய்யும், உயர்குடி மனிதர்களின் கழுத்தை அலங்கரிக்கும் பேஷன் பொருளாகிப்போனது.
இது சதியோ அல்லது விதியோ என்று தெரியவி;ல்லை ஆனால் இன்று சிலுவையின் கதி இதுதான். கிறிஸ்தவம் கண் விழிக்குமா? சிலுவை மரம் தளிர்க்குமா?
Beauty, அழகு
அழகு
கண்களுக்கு முன்னால் அழகு குவிந்துக் கிடக்கின்றது. கூழாங்கற்கள் போர்த்தும் ஓடை அழகு. கூடை கூடையாய் பூக்கும் பூ அழகு, மலை அழகு, மழை அழகு. மொழி அழகு, மௌனம் அழகு, பறவைகள் அழகு, பருவம் அழகு, இசை அழகு, இருள் அழகு, தேகம் அழகு, மேகம் அழகு, புல் அழகு, பனி அழகு, உதயம் அழுகு, ஊனம் அழகு, கடமை அழகு, கருமை அழகு, முதுமை அழகு, புதுமை அழகு, நாம் அழகு, நமது என்பது அழகு, வேகம் அழகு, வெயில் அழகு, குழந்தை அழகு, உழைப்பு அழகு, அன்பு அழகு, அமைதி அழகு, சிரிப்பு அழகு, சித்திரம் அழகு.
'பார்க்கும் கண்கள் அழகெனின்
பார்ப்பவை அனைத்தும் அழகே'
Time, காலம்
காலம்
காலம் ஓடிக்கொண்டிருக்கின்றது. காலத்தோடு ஓடுபவன் வெற்றி பெறுகின்றான். காலத்தை ஓடவிட்டு பார்ப்பவன் ஒதுக்கப்படுகின்றான்.
காலத்தின் சூட்டிலே, அதன் கதகதப்பு கலாச்சாரத்திற்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக் கொள்ள தெரியாதவன் வாழ்க்கைப் பயணத்திற்கு தேவையற்றவன் என்று பார்க்கப்படுகின்றான்.
மனிதன் நாம் நினைத்துக் கொண்டிருக்கும் மனிதனைவிட சக்தி வாய்ந்தவன்.
அண்டம், காலம் அனைத்தையுமே தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு சக்தி வாய்ந்தவன்.
ஆனால் மனிதன் இதனை மறந்து காலத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளாது, அதன் கட்டுக்குள் முடங்கிப் போய்விடுகின்றான்.
காலம் பல நிகழ்வுகளை உள்ளடக்கியது. நிகழ்வுகளையும் காலத்தையும் வேறுபடுத்தி பார்ப்பது கடினம்.
காலத்தை தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர மனிதன் நிகழ்வுகளை தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
காலம் நம்மை கடந்து பயணித்தாலும் காலத்தை உணர்ந்துக் கொள்ள தெரிந்துகொள்ள உதவும் நிகழ்வுகள் முழுக்க முழுக்க நம் கட்டுப்பாடடிற்கு உரியதே.
நம்மை சார்ந்து சுற்றி நிகழும் நிகழ்வுகளை நம் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தோம் என்றால் காலம் நம் கைக்குள் அடங்கும்.
நான் பேசுவதை, செய்வதை தெளிந்து, தேர்ந்து, அறிந்து, ஆய்ந்து உணர்ந்து உகந்து செய்யும் போது என்னை சார்ந்த சுற்றிய நிகழ்வுகள் என் கட்டுப்பாட்டிற்குள் நடக்கும் நிகழ்வுகள் ஆகின்றன. நிகழ்வுகள் என் கட்டுப்பாட்டில் வரும்போது நிகழ்வுகள் கொண்டிருக்கும் காலமும் என் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுகின்றது.
இனி காலத்துடன் நான் ஓடத் தேவையில்லை. நான் கட்டளையிட்டால் காலம் என்னோடு ஓட கூடும்
இனி காலமும் மனித கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதே.
Competition, போட்டி
போட்டி
உலகம் முண்டியடித்துக் கொண்டு முன்னேறுகின்றது. முன்னேற்றம் 40 சதவீதம் இருக்க அது விட்டுச் செல்லும் கழிவுகள் 60 சதவீதம் உள்ளது.
மனிதன் காலையில் எழும்பி கழிவறையை பிடிப்பதிலிருந்து, பேருந்தை பிடிப்பது வரை பேருந்தில் இடம்பிடிப்பதிலிருந்து, பேரூந்திலிருந்து இரங்குவது வரை, அலுவலக வேலையிலிருந்து அரைவயிறு சாப்பாடு வரை, பள்ளிக்கூட படிப்பிலிருந்து பணி உயர்வு பெறுவது வரை, முண்டியடித்து பிறப்பதிலிருந்து முக்கி மோதி முன்னேருவதிலிருந்து, முடங்கிப்போய் விழுவதுவரை மனிதன் காலத்துடனும், கலாச்சாரத்துடனும், ஒருவன் மற்றவனுடனும் போட்டி போட்டுக்கொண்டே இருக்கின்றான், இறக்கின்றான்.
'போட்டி இல்லா உலகம்' எனும் கண்ணோட்டம் இந்நிலையிலும் சாத்தியமா என்பது பலரின் கேள்வி சாத்தியமில்லை என்பதுதான் எனது பதில். உண்மையிலேயே போட்டி உழஅpநவவைழைn என்ற சொல்லின் பொருள் உணர்ந்தால் நீங்களும் போட்டி வேண்டும் என்று தான் சொல்வீர்கள்.
"Competition" என்னும் ஆங்கில வார்த்தையின் வேர்ச்சொல் இலத்தீன் வார்த்தையான 'Con Petire; என்பதாகும். இச்சொல்லின் பொருளை கேட்டால் நமக்கு சிரிப்புதான் வரும். 'Con Petre' என்னும் சொல்லின் பொருள் ஒன்றாகத் தேடுவது (to search together). ஒருவன் மற்றொருவனை அடித்துக் கொண்டு, கழுத்தை அறுத்துக் கொண்டு முன்னேறுவது அல்ல. மாறாக ஒன்றாக வளர்ச்சியை எட்டுவது. ஒருமனதாக முழுமையை தேடுவது. பந்தயத்தில் பிறரை தள்ளிப் போட்டுக்கொண்டு ஓடுவது அல்ல. விழுந்தவனையும் தூக்கிவிட்டுவி;ட்டு அவனுடன் சேர்ந்து ஓடி வெற்றி பெறுவது.
இத்தகைய போட்டி மனப்பான்மை நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.
என்ன, போட்டிப்போட நான் தயார். நீங்கள் தயாரா...?
The Winner, வெற்றியாளன்
வெற்றியாளன்
உலகிலே வெற்றி பெற்றவர்கள் பலரென்றால் அதில் ஒரு சிலருக்கு மட்டுமே வெற்றியின் மகுடம் சூட்டப்படுகின்றது.
நேர்மையோடு உழைப்பினால் வென்றவர்கள் உதாசினப்படுத்தப்பட்டு குறுக்குவழியில் உழைக்காமல் வென்றவர்கள் உயர்த்திக் காட்டப்படுகின்றனர்.
ஒரு சிலர் தானாகவே வெற்றிக் கனியை பெறுகின்றார்கள். வேறு சிலரின் மேல் வெற்றி பலவந்தமாக திணிக்கப்படுகின்றது. மற்ற சிலர் விலை கொடுத்து வெற்றியை வாங்கிக் கொள்கின்றனர்.
பாரத ரத்னா என்பது இந்திய அரசால் ஒரு காலத்தில் வெற்றியாளர்களுக்கு கொடுக்கப்படும் உயரிய விருது. ஆனால் இன்று கட்சி சாயம் பூசப்பட்டு, விலை கொடுத்து வாங்கக்கூடிய பஞ்சுமிட்டாய் கதையாகிப் போனது.
உலகிலேயே உயரிய விருதான அமைதிக்கான நோபல் பரிசு. அகிம்சையின் தந்தை என்று சொல்லக்கூடிய காந்திக்கு கொடுக்கப்படவில்லை என்பதுதான் வேடிக்கையான உண்மை.
திரைப்பட நடிகர்களையும் மட்டைப்பந்து ஆட்டக்காரர்களையும் டாட்டா, அம்பானிகளையும் வெற்றியாளர்களாக காட்டும் இவ்வுலகம் எண்ணற்ற பாமர மனிதர்களின் வெற்றியினையும் பிறரை வெற்றியாளனாக உருவாக்கிய சராசரிகளை இருட்டடிப்பு செய்கிறது.
உண்மை வெற்றியாளன் வெற்றி பெறுபவன் அல்ல வெற்றி பெறச் செய்பவன். எனவே வெற்றி பெறுவது அல்ல. கொடுப்பதில் தான் இருக்கி;ன்றது வெற்றியாளனின் வெற்றி. வெற்றி பெறுவது இலக்கு அன்று. வெற்றி பெறச் செய்வதுதான் சிறந்த இலக்கு.
Subscribe to:
Posts (Atom)