அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

Holiness, புனிதத்துவம்

புனிதத்துவம்



மரத்தின் கிளை ஒன்றில் சிட்டுக்குருவி ஒன்று அமர்ந்திருந்தது. கிளையின் ஒரு முனையில் பாம்பு ஒன்றும் மறுமுனையில் ஆந்தை ஒன்றும் சிட:டுக் குருவியை கொன்று தின்ன கங்கணம் கட்டிக் கொண்டன. இருதலைக் கொள்ளி எறும்பு போல பயத்தில் நடுங்கியது சிட்டுக்குருவி. இவ்வேளையில் குரல் ஒன்று உள்மனதிலிருந்து கேட்டது, 'சிட்டுக்குருவியே, சிட்டுக்குருவியே சிறகுகள் இருப்பது உனக்குத் தெரியாதா?'. சிட்டுக்குருவி சுதாரித்துக் கொண்டது. தனக்கு சிறகுகள் இருப்பதை உணர்ந்தது, சிறகை விரித்தது மகிழ்ச்சியோடு பறந்து சென்றது.



புனிதம் என்பது வெளியிலிருந்து என்னில் திணிக்கப்படுவது அன்று, மாறாக என்னில் புதைத்துக் கிடப்பது. புதைத்ததை தூசித்தட்டி பார்ப்பவன் புனிதனாகிறான். புதைத்ததை மென்மேலும் புதைப்பவன் மிருகமாகிறான். நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதனால் தூய்மை என்பதே நம் சாயல், புனிதம் என்பதே நம் அடையாளம்.



புனித வாழ்வு என்பது நான்கு சுவற்றுக்குள் அடங்கிக்கொண்டு செபம் செய்வதில் மட்டுமல்ல, சுவரே இல்லாமல் வாழும் மக்களுக்கு சுவராக இருப்பதிலும் அடங்கியுள்ளது.



செருப்பை பத்திரமாக கழற்றிவிட்டு ஆலயம் செல்வதில் மட்டுமல்ல செருப்பு அணிய காலே இல்லாத மக்களுக்கு தோள் கொடுப்பதில் அடங்கியுள்ளது. புனிதம் கோவிலுக்குள் மட்டுமல்ல குப்பை மேட்டிலும் உண்டு. சாமியார்களிடம் மட்டும் அல்ல. சம்சாரிகளிடம் உண்டு.



உன்னில் புனிதத்துவம் உண்டு. அதனை கண்டுணரும்போது நீ புனிதனாகின்றாய். பின்பு உன் புனிதத்துவம் இயல்பாகவே பிறரையும் புனிதர்;களாக மாற்றி விடும் ஆற்றல் பெற்றுவிடுகின்றது.



செயல்பாடில்லாத புனிதத்துவம் போலியானதே. புனிதத்துவம் என்னில் வெளிப்பட்டு பிறரில் பிரதிபலிப்பது. பிறரில் வெளிப்பட்டு என்னில் பிரதிபலிப்பது (என்னில் வெளிப்பாட்டு என்னில் பிரதிபலிப்பது அல்ல).



நீ புனிதனாக வாழ்கிறாய் என்பது உன்னில் அல்ல. உன்னைச் சுற்றியுள்ள சமுதாய அமைப்பில் அதன் ஒழுங்கு முறைகளில், விடுதலை வாழ்வின் வெளிப்பாட்டில் புரிந்து கொள்ளப்படுகின்றது.



நீ யார் என்பதை முகக்கண்ணாடி காட்டுவது போல உன் புனித வாழ்வை உன் சுற்றம் காட்டிக் கொடுத்துவிடும்.