சிலுவை
சிலுவை, கிறிஸ்தவத்தின் அச்சாணி, ஆணிவேர். சிலுவையின்றி கிறிஸ்தவம் இல்லை. பழைய ஏற்பாடு மரத்தின் கனியை உண்டவர்கள் மாண்டுபோனார்கள். புதிய ஏற்பாட்டுச் சிலுவை மரத்தின் கனியை உண்டவர்கள் நிறைவாழ்வு பெற்றவர்கள்.
சிலுவை உடன்படிக்கையின் அடையாளம், உடைக்கப்பட்டவர்களின் அடையாளம், அர்ப்பணத்தின் அடையாளம் நிபந்தனையற்ற அன்பின் அடையாளம், கிறிஸ்தவ அடையாளங்களுக்கெல்லாம் ஒரு அடையாளம்.
இத்தகைய மாண்புமிகு சிலுவை இன்று சிறை வைக்கப்படுகின்றது. சித்திரவதை செய்யப்படுகின்றது சிறுமைப்படுத்தப்படுகின்றது என்பது தான் உண்மை.
எப்படியும் வாழலாம் என்பதை விடுத்து இப்படித்தான் வாழவேண்டும் என்று சொல்லித்தரும் சிலுவை இன்று எப்படியும் வாழலாம் என்பவர்களின் கழுத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கின்றது.
திருடர்களும், தீவிரவாதிகளும், தீயவர்களும் சிலுவையின் மேன்மை அறியாது அணிந்து வரும் அவமான சின்னமாகிப் போனது.
புழுதியில் புரள்பவர்களுக்கு புகலிடம் தேடித்தரும் புரட்சி சிலுவை இன்று பாப் நடனமாடி, கிராப் முடி திருத்தி, கேட் வாக்கிங் செய்யும், உயர்குடி மனிதர்களின் கழுத்தை அலங்கரிக்கும் பேஷன் பொருளாகிப்போனது.
இது சதியோ அல்லது விதியோ என்று தெரியவி;ல்லை ஆனால் இன்று சிலுவையின் கதி இதுதான். கிறிஸ்தவம் கண் விழிக்குமா? சிலுவை மரம் தளிர்க்குமா?