காலம்
காலம் ஓடிக்கொண்டிருக்கின்றது. காலத்தோடு ஓடுபவன் வெற்றி பெறுகின்றான். காலத்தை ஓடவிட்டு பார்ப்பவன் ஒதுக்கப்படுகின்றான்.
காலத்தின் சூட்டிலே, அதன் கதகதப்பு கலாச்சாரத்திற்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக் கொள்ள தெரியாதவன் வாழ்க்கைப் பயணத்திற்கு தேவையற்றவன் என்று பார்க்கப்படுகின்றான்.
மனிதன் நாம் நினைத்துக் கொண்டிருக்கும் மனிதனைவிட சக்தி வாய்ந்தவன்.
அண்டம், காலம் அனைத்தையுமே தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு சக்தி வாய்ந்தவன்.
ஆனால் மனிதன் இதனை மறந்து காலத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளாது, அதன் கட்டுக்குள் முடங்கிப் போய்விடுகின்றான்.
காலம் பல நிகழ்வுகளை உள்ளடக்கியது. நிகழ்வுகளையும் காலத்தையும் வேறுபடுத்தி பார்ப்பது கடினம்.
காலத்தை தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர மனிதன் நிகழ்வுகளை தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
காலம் நம்மை கடந்து பயணித்தாலும் காலத்தை உணர்ந்துக் கொள்ள தெரிந்துகொள்ள உதவும் நிகழ்வுகள் முழுக்க முழுக்க நம் கட்டுப்பாடடிற்கு உரியதே.
நம்மை சார்ந்து சுற்றி நிகழும் நிகழ்வுகளை நம் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தோம் என்றால் காலம் நம் கைக்குள் அடங்கும்.
நான் பேசுவதை, செய்வதை தெளிந்து, தேர்ந்து, அறிந்து, ஆய்ந்து உணர்ந்து உகந்து செய்யும் போது என்னை சார்ந்த சுற்றிய நிகழ்வுகள் என் கட்டுப்பாட்டிற்குள் நடக்கும் நிகழ்வுகள் ஆகின்றன. நிகழ்வுகள் என் கட்டுப்பாட்டில் வரும்போது நிகழ்வுகள் கொண்டிருக்கும் காலமும் என் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுகின்றது.
இனி காலத்துடன் நான் ஓடத் தேவையில்லை. நான் கட்டளையிட்டால் காலம் என்னோடு ஓட கூடும்
இனி காலமும் மனித கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதே.