அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

Jasmine - the story of a flower, மல்லிகை மொட்டு

மல்லிகை மொட்டு

         ஜூன் மாதம் மாலைநேரம் வாகன நெரிசல் நிறைந்த சாலை பகுதி. கூடு திரும்பும் பறவைகள் போன்று வீடு திரும்பும் மாணவக் கூட்டம். அலுத்துப்போய், களைத்துப்போய் 4 மணி பேருந்துக்காய் 5 மணியான பிறகும் காத்திருக்கும் உழைக்கும் வர்க்கம். ஊனமாய், ஊமையாய் சாலையோரத்தில் நடுத்தர வயது பெண் மல்லிகை மொட்டுக்களை வேக வேகமாய் தொடுக்கும் காட்சி என் மனதில் சலசலப்பை ஏற்படுத்தியது. விரல்கள், பின்னல் வேலைபாடுகளில் மூழ்கிகிடந்தாலும் யாராவது  பூ வாங்க வரமாட்டார்களா என்ற ஏக்கம் கண்களில் மையம் கொண்டிருந்தது.

ஏன் இந்த துரிதம்? தெரியவில்லை. ஏன் இந்த ஏக்கம்? புரியவில்லை. என் சிந்தனை இந்த விரல்களின் வேகத்திற்கு காரணம் தேடி சிறகடித்தது.

ஒருவேளை, படுத்த படுக்கையாய் கிடக்கும் தன் கணவனுக்கு மருந்து மாத்திரை வாங்க பணம் தேவைப்படுமோ!

அல்லது தினம் பசியால் தூங்கும் பிள்ளைகளுக்கு இன்றாவது நல்ல சாப்பாடு சமைத்துப் போட வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்குமோ!

தினம் தினம் வந்து வட்டி பணம் கேட்டு நச்சரிக்கும் கடன்காரன் தொல்லையிலிருந்து இன்றாவது விமோச்சனம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இருக்குமோ!

அல்லது கிழிந்த சட்டையை 3 ஆண்டுகளாக போட்டுக்கிட்டு பள்ளிக்கு போகும் தன் பிள்ளைகளுக்கு ஒரு சீருடை வாங்கித் தந்திட வேண்டும் என்ற ஆசையோ!

இந்த விரல்களின் துரிதத்திற்கு காரணம் தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் புரிந்தது. விரல்களுக்கிடையே கோர்க்கப்பட்டிருக்கும் இந்த மல்லிகை மொட்டுக்கள் விற்கப்படமால் மலர்ந்திருக்கும்போது இவள் நிச்சயம் மடிந்திருப்பாள்.
“அக்கா! எனக்கு ஐந்து முழம்  மல்லிகை சரம் கொடுங்கள்”. யாரோ பெண் ஒருவர்  பூ வாங்கும் காட்சி கண்டு நிம்மதி பெருமூச்சுடன் பயணத்தை தொடர்ந்தேன்.