அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

அந்த பெண்ணை எனக்கு பிடிக்கவே பிடிக்காது, I and my Girl


அந்த பெண்ணை எனக்கு பிடிக்கவே பிடிக்காது

அந்த பெண்ணை எனக்கு பிடிக்கவே பிடிக்காது. அவள் அழகாய் இருப்பாள் ஆனாலும் அவளை எனக்கு பிடிக்காது. அவளைக் கண்டாலே ஒரு வித வெறுப்பு. நான் வேலைப் பார்த்த பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள் அவள். கசங்கிய ஆடை, அழுக்கான காலணி, சீவாத தலைமுடி, தலைக்குனிந்த பார்வை இவையே அவள் அடையாளம். படிப்பு என்பது கசப்பு காய் அவளுக்கு. கையெழுத்து என்பது கோழி கிண்டிய தலையெழுத்து. அவளை கண்டாலே எனக்கு பிடிக்காது. அவளை திட்டியே தீர்ப்பேன். 'சனியன் ! என் உயிர எடுக்கவே வந்திருக்கினறது'.

அவளை பற்றி குறைச்சொல்ல தலைமையாசிரியரை அணுகினேன். அவளை பற்றி சொல்ல ஆரம்பித்தவுடனேயே அவர் இடைமறித்து அந்த பெண்ணை பற்றி அவர் சொன்னது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

'அவளுடைய பெற்றோர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தப்போது விபத்திற்குள்ளாகி தாய் சம்பவ இடத்திலேயே இறந்து போனாள். தந்தை கால் ஊனமாக படுத்த படுக்கையானார். இந்த சிறு பிள்ளையை பார்க்க அவளுடைய வயதான பாட்டி மட்டுமே இருக்கின்றார்' என்று அவர் சொன்ன உடனேயே என் மனம் வேதனையில் ஆழ்ந்தது.

அவளை பார்த்த பார்வை அடியோடு மறைந்து போனது. அவள் என்னை பார்த்து சிரிக்கும் போது நான் என்னை பார்த்து சிரித்துக்கொண்டேன். அவள் என்னை பார்த்து புன்முறுவல் செய்யும் போது நான் எனக்குள்ளேயே அழுதுக் கொண்டேன்.

பார்வை மாறும் போது எல்லாமே மாறுகின்றது.

தேர்தல் தவறு, Election and Err

எச்சரிக்கையாய் இருப்போம். 
மதவாத பயங்கரவாதத்தை தவிர்ப்போம்.

ஒட்டுமொத்த தமிழகமே தேர்தல் தவறு இழைத்துவிடுமோ என்று ஐயம் எழுகின்றது.

தேர்தலில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை எதிர்த்து அதே கட்சியில் உள்ளவர்களே போட்டி வேட்பாளர்களாக களம் இறங்கியிருப்பது கட்சியின் பலத்தை குறைக்கின்றது. கட்சி அரசியலின் உண்மை தன்மையை அவர்கள் விசுவாசத்தை தோலுரித்துக் காட்டுகின்றது.

மதச்சார்பற்ற கட்சிகளின் ஓட்டு பிரிவதன் மூலமாக மதச்சார்பு கட்சிகளும், தீவிரவாத சமய பயங்கரவாதிகளும் தேர்தலில் வெற்றிப்பெறும் அபாயம் இருக்கின்றது. எனவே நம் நிலைப்பாட்டில் ஒற்றுமை தேவை.

எச்சரிக்கையாய் இருப்போம். சுய லாபம் பார்க்கும் வேட்பாளர்களை புறக்கணிப்போம்.

ஒன்று சேர்ந்து நம் ஓட்டுகள் சிதராமல் சிந்தாமல் மதச்சார்பற்ற கட்சி வேட்பாளர்களுக்கு நம் ஆதரவை கொடுப்போம்.

மதவாத பயங்கரவாதத்தை தவிர்ப்போம்.


எகிப்து புரட்சியும் இளைய இணையமும், Egypt and internet revolution

எகிப்து புரட்சியும் இளைய இணையமும்

    இணையத்தினை இளைஞர்கள் தவறுதலாக மட்டுமே பயன் படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்ற செய்தி இன்று கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றது. சமீபத்தில் 30 ஆண்டுகாலமாக 1981 ல் இருந்து கொடுங்கோலாட்சி செய்து வந்த ஹாசினி முபாரக்கின் ஆட்சியை புரட்சி செய்து புரட்டிப் போட்டிருக்கின்றது இளைய இணையம்.

    பேஸ் புக் (Facebook) எனும் சமூக தொடர்பு வலைத்தளம் எகிப்தின் தலை எழுத்தையே மாற்றியிருக்கின்றது. எகிப்தின் 8,00,000 இளைஞர்கள் இந்த சமூக தொடர்பு வலைத்தளத்தை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். தங்களின் கருத்துக்களை, அதிர்ப்திகளை பதிவுச் செய்கின்றனர். ஒத்தக் கருத்துடையவர்கள் சில ஆயிரம் பேர் இணைந்து வலைக்குழுக்களாக (groups) தங்களை இணைத்துக்கொள்கின்றார்கள். காரச்சாரமான விவாதங்களும் (group Chat) புதிய புரட்சிகர கருத்துருவாக்கங்களும் பரவலாக்கம் செய்யப்படுகின்றன. அரசு நடத்தும் கொடுமைகளும், கொலைகளும், கட்டவிழ்த்து விடுகின்ற வன்முறை காட்சிகளும் பரிமாறப்படுகின்றன. இவை இளைய சமூதாயத்தினர் மனதில் தாக்கத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதனால் வலைக்குழுக்களில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள்  தெருக்களில் இறங்கி போராட துணிந்தார்கள். இதனாலையே எகிப்து புரட்சி அரும்ப தொடங்கியது.

    எகிப்து புரட்சியின் வெற்றியை பெற்று தந்த பேஸ்புக் (Facebook) வலைத்தளத்தை பாராட்டும் பொருட்டு ஜமால் இப்ராகிம் என்ற மனிதர் தன் மகளுக்கு பேஸ்புக் ஜமால் இப்ராகிம் என்று பெயர் சூட்டியிருக்கின்றார்.

டிஜிட்டல் சுனாமி, Digital World

டிஜிட்டல் சுனாமி

உலகத்தினை உள்ளங்கையிலே வைத்து பார்க்கும் பேறு இன்றைய இளைஞர்களுக்கு கிடைத்திருக்கின்றது. இருபது ஆண்டுகளுக்கு முன்பாக மக்கள் கண்டிராத கேள்விப்படாத உயர்தர டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் நம் இளைஞர்களின் அன்றாட பழக்கவழக்கங்களாகி விட்டன. நகரத்து இளைஞர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று கருதப்பட்ட டிஜிட்டல் யுகம் கிராமத்து மூலை முடுக்குகளிலும் பேரொலியாய் ஒலிக்க தொடங்கி விட்டன. இன்று இந்த டிஜிட்டல் தொழில் நுட்பங்களையும் இளைஞர்களையும் பிரித்து பார்ப்பது என்பது இயலாத ஒன்று.  

Computer, Cell Phone, I-Pod, I-Pad, Laptop, LCD, LED, Web Cam,   என்று ஊடகத்துறையில் தொழில் நுட்ப புரட்சி உலக சந்தையில் சக்கைப் போடு போடுகின்றது. 80 சதவிகித இளையோரே இதன் ஒட்டு மொத்த நுகர்வோராக இருக்கின்றனர். இளைஞர்களை மட்டுமே குறிவைத்து தாக்கும் இந்த டிஜிட்டல் சுனாமிக்கு பலியாகின்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. 

ஊடகத்துறையில் பல தொழில் நுட்பங்கள் சந்தையில் வந்தப்பிறகு இணையத்தின் அசூரத்தனமான வளர்ச்சி வியப்பை ஏற்படுத்துகின்றது. இணையத்தினை ஒரு வழுக்குப்பாறை எனலாம். சரியான புரிதல் இல்லாத இளைஞர்களை இது எளிதில் வழுக்கி விழச்செய்யும்.

வலை விபத்துக்கள் , Internet Beware

வலை விபத்துக்கள்

    இணையத்தின் ஆக்கப்பூர்வமான பயன்பாடுகள் பல இருப்பினும் இளைஞர்களை வழி தவறச் செய்யும் யுக்தியும் இணையத்திற்கு அதிகமாகவே உண்டு. இன்று அதிகமாக இணையத்தினை பயன்படுத்துபவர்கள் இளையோரே. இணையத்தற்கு முன்பாக முற்றிலும் சரணாகதியாகி, அடிமையாகி அல்லலுருகின்ற இளையோரின் கதைகள் பல உண்டு. இளைஞர்களை வலையில் விழவைக்கும் விபத்துக்கள் சிலவற்கை இங்கே காண்பேம்.

1.  Hackers: தொழில்நுட்ப முறைகேடு விளைவித்து உங்கள் வலைத்தள முகவரியை, குறியீட்டு எண்ணை வழிமறித்து அதனை தவறான காரியங்களுக்கு பயன்படுத்தும் போது உங்கள் பெயரில் தீமைகள் அரங்கேர வாய்ப்பு உண்டு.

2.    Scammers: உலக மோசடி ஆசாமிகள் வலைத்தளங்களில் உலாவருகின்றனர். உங்களுக்கு லாட்டரி அடித்துவிட்டது. நீங்கள் ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக போகின்றீர்கள். பணத்தை பெற்றுக்;கொள்வதற்கு முன்பணமாக 1 லட்சம் கொடுத்தால் போதும் என்று கூறி மோசடியில் ஈடுப்படும் ஆசாமிகளை கண்டு இளையோர் கவனமாக இருக்க வேண்டும்.

3.    Spammers: சில மின்னஞ்சல்கள் உங்கள் கணிணியினை பாதிக்கக்கூடியதாக இருக்குக். விளம்பரங்களாகவோ, வைரசுகளாகவோ, வீண் சந்தை வியாபாரங்களாகவோ, எரிச்சலை தரக்கூடியதாகவோ இருக்கும். இதற்கு இளைஞர்கள் முக்கியத்துவம் கொடுக்கக கூடாது.

4.   Pornography: இளைஞர்கள் பலரை பலியாக்கி அவர்களின் பாலியல் உணர்வுகளை மிகைப்படுத்தி அவர்களை சீர்கெட தூண்டுவதும், தவறான பாலியல் கருத்துக்களை, காட்சிகளை விதைப்பதும் இணையத்தின் வலை விளையாடல்களே. இளைஞர்கள் இத்தயை கணிணியின் கண்ணியிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

5.    Cyber Bullying: தன்கட்டுப்பாட்டில் ஒருவர் இருக்கவேண்டும் என்பதற்காக அந்த நபருக்கு தொடர்ந்து மிரட்டல் கடிதங்களும், கொச்சை உரையாடல்களும் நடத்தி இளையோரின் மனதை காயப்படுத்தி அவர்களை தற்கொலை செய்துக்கொள்ள கூட தூண்டும் மனிதர்கள் வலை தளங்களில் உண்டு. இவர்களின் வலைகளில் இளையோர் விழுந்து விடக்கூடாது.

6.   Cyber-Persona: நண்பர்களோடும் குடும்பத்தினரோடும் நல்ல உறவு இல்லாத இளைஞர்கள் மிக எளிதாக வலை விபத்துக்களில் சிக்கி விடுகின்றனர். இத்தகைய இளையோரை கொக்கிப்போட்டு பிடிக்கவே பல வலைத்தளங்கள் உண்டு. ஊர், பெயர், முகவரி தெரியாத மனிதர்களோடு உறவுக் கொண்டு நாள் முழுவதும் அவர்களோடு தொடர்பில் இருக்க இளைஞர்கள் விரும்புகின்றனர். இதனால் தங்கள் நேரத்தையும் தங்கள் வாழ்க்கையையும் விரயம் செய்யும் அபாயம் உண்டு.

இந்தியாவில் ஏறக்குறைய 45 கோடி இளைஞர்கள் உள்ளனர். இதில் சராசரி 15 கோடி இளைஞர்கள் இணையத்தினை பயன்படுத்துபவர்களாக இருக்கின்றனர். இச்சூழலில் இணையத்தின் ஆழத்தினையும அதன் ஆபத்தினையும்;, அகலத்தினையும் அதன் அபாயத்தினையும்,இளைஞர்கள் உணர்ந்திருப்பது நல்லது.

கண்ணீர் அஞ்சலி...

 கண்ணீர் அஞ்சலி...

சுனாமியால் வீடுகள் இழந்து, 
உறவுகள் இழந்து 
தவிக்கும் 
ஜப்பான் மக்களுக்கு 
எம் கண்ணீர் அஞ்சலி...

கிரிக்கெட் என்னும் அரசியல் விளையாட்டு, Cricket and Politics

கிரிக்கெட் என்னும் அரசியல் விளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மக்கள் மனங்களிலும் எண்ணங்களிலும் கிரிக்கெட் போட்டியின் நினைவுகளே மேலோங்கியிருக்கின்றது.

பாராளுமன்றத்தை முடக்கிப்போட்ட தெலுங்கானா பிரச்சினை மக்களின் எண்ணங்களில் வருவதில்லை.

வரவிருக்கின்ற மாநிலங்களவை தேர்தல் அதன் முக்கியத்துவம் மக்கள் எண்ணங்களில் வருவதில்லை.

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஸ்பெக்ட்ரம் மற்றும் ராசா பற்றிய செய்திகள் முக்கியத்துவம் பெறுவதில்லை.

ஆதர்ஸ் குடியிருப்பு முறைகேடுகள் பற்றிய செய்திகள் அதிகம் பேசப்படவில்லை.

வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்ற கருப்பு பணம் பற்றிய பேச்சு இல்லை.

உலகத்தையே புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கின்ற எகிப்து மற்றும் லிபியா புரட்சி பற்றிய செய்திகளுக்கு நம்மவர்கள் முக்கியத்துவம் தருவதில்லை.

காரணம்...

உலக கோப்பை கிரிக்கெட்..

விடையாட்டு வீரர்கள் நன்றாக விளையாடுகின்றார்களோ என்னவோ அரசியல் உலககோப்பை போட்டிகளில் நன்றாகவே விளையாடுகின்றது.




வாக்கு போடவா! தூக்கு போடவா ! Election and Right

வாக்கு போடவா! தூக்கு போடவா !

தேர்தல் காய்ச்சல் தொற்றிக் கொண்டு விட்டது. கட்சி அரசியல் பேச்சு வார்த்தைகள், குரங்கு தாவல்கள் எல்லாம் ஒரு விதத்தில் முடிவிற்கு வந்துக் கொண்டிருக்கின்றன.

தேர்தலின் போது நான்கு வித நிலைப்பாடுகளை கொண்ட மக்களை நாம் காண முடியும்.

1. ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன என்ற மனநிலை கொண்ட மக்கள்.

2. திருடர்களையும் ஊழல் பெருச்சாளிகளையும் தேர்ந்தெடுக்க ஏன் வாக்களிக்க வேண்டும்  எனும் மனநிலைக் கொண்ட மக்கள்.

3. கொள்கை இல்லாமல் பணத்துக்கும் சலுகைக்கும் ஆசைப்படும் மக்கள்.

4. கொள்கையினை உயிர் மூச்சாக கொண்டு சிறந்த தலைவர்களை தெளிந்து தேர்ந்தெடுப்பவர்கள்.

 தேர்தலை சரியாக ஜனநாயக முறையில் நடத்துவது தேர்தல் ஆணையத்தின் கடமையாக இருந்தாலும் தேர்தலில் ஜனநாயக கடமையாற்றுவது மக்களின் கடமையாகும்.

இது வரை 57 சதவிகிதம் தான் மக்களவை தேர்தலின் உச்சக் கட்ட வாக்கு பதிவாக இருந்திருக்கின்றது.

மீதமுள்ள 43 சதவிகிதம் மக்கள் ஜனநாயகத்தை புறக்கணித்திருக்கின்றார்கள், தங்கள் உரிமையை மறுத்திருக்கின்றார்கள்.

இதனால் தான் ஊழல் பெருச்சாளிகளும், திருடர்களும், ரவுடிகளும் நாட்டை ஆளக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இந்த 43 சதவிகிதத்தினரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றியிருப்பார்கள் என்றால் இந்த நிலை வந்திருக்காது.

நல்லாட்சி அமைய, மக்கள் கவலையில்லாமல் வாழ, மனிதம் மலர, பொருளாதாரம் சிறக்க, மானுடம் காக்கப்பட நல்லவர்களை, கொள்கைவாதிகளை தேர்ந்தெடுப்பீர்!

வாக்கு போட தவறுவது என்பது தனக்கு தானே தூக்குப் போட்டுக்கொள்வதற்கு சமமானது.