சாலையோர விளக்கு...
அது ஒரு மாலை நேரம். சாலையோரம் பேருந்து நிறுத்தில் நின்றுக்கொண்டிருந்தேன். மக்கள் தங்கள் அலுவலக வேலை முடித்தும், மாணவர்கள் பள்ளி கல்லூரி முடித்துக்கொண்டு வீடு செல்ல பேருந்துக்காக காத்துக்கிடந்தனர்.
சாலையோர தேனீர் கடையில் கூட்டம் அலைமோதியது. தேனீர் குவளையை கையில் அழகாக பிடித்தப்படி உதட்டோரமாக குடிக்கும் முறையே ஒரு பெருமிதம் தரும்.
நானும் தேனீர் சுவைத்தப்படி ரீங்கரிக்கும் தேனீயாக கண்பார்வையை மக்கள் நோக்கி கூர்மைப்படுத்தினேன்.
பிச்சை எடுக்கும் பெண் ஒருத்தி தன் கைக் குழந்தையோடு சாலையோரம் பேருந்துக்காய் நின்றுக் கொண்டிருப்பவர்களிடம் தன் கையை நீட்டி பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
பிச்சை கேட்பவரிடம் சில பேர் தலையை அசைத்து இல்லை என்றார்கள். சிலர் நின்றுக்கொண்டிருந்த இடத்தை விட்டு வேறு இடம் நகர்ந்தனர். சிலர் மௌனமாய் கண்டுக்காதவர் போல் நின்றனர். சிலர் திட்டி தீர்த்தனர். சிலர் சில்லரைக்காய் மேல் கீழ் சட்டை பையை ஆராய்ந்தனர்.
இக்காட்சிகளை கூர்ந்து பார்ப்பதிலும் மக்களின் முக, உடல், மன பாவனைகளை, அசைவுகளை கவனிப்பதே என்னைப் போன்ற சிலரின் புத்தியாக இருந்தது.
'சகோதரா! வடை கேட்டிருந்தீர்களே. இதோ வடை சூடா இருக்கிறது' என்று சூம்பி போன இடது கையை கொண்ட அந்த இளைஞன் முக மகிழ்சியோடு தன் தன்னம்பிக்கையை நீட்டினான்.
உண்மையான ஏழைகள் சாலையில் பிச்சை எடுப்பவர்கள் அல்ல சாலையோரத்தில் சிறுத் தொழில் செய்து தங்கள் வயிற்றை நிறப்பிக்கொள்பவர்களே.
ஏழைகளின் மேல் அக்கறை கொண்டவர்கள் பிச்சை கலாச்சாரத்தை ஊக்குவிப்பவர்கள் அல்ல. சாலையோர வியபாரிகளிடம் பொருட்களை வாங்கிக்கொள்பவர்களே.