வலையை ஆழத்தில் போடுங்கள்
ஊடகத்தின் வளர்ச்சியும் எழுச்சியும் கட்டுக்கடங்காத விதத்தில் போய் கொண்டிருக்கின்றது. ஊடகத்தினை கூர்மைப் படுத்தும் போது இலக்கினை எளிதாக அடையமுடிகின்றது.
இணையத்தினை சரியாக பயன்படுத்தும் போது ஒரு சமூக மாற்றமே நடைபெறக்கூடும் என்பதை தான் எகிப்து, ஏமன், பகரின் போன்ற ஏகாதிபத்திய அரசிற்கு எதிரான போராட்டமும் புரட்சியும் நமக்கு எடுத்தியம்புகின்றது.
புரட்சியாளர்களை ஒருங்கிணைக்கவும், புரட்சி சிந்தனைகளை விதைக்கவும் வலைத்தளங்கள் இன்று பெரும் பங்காற்றுகின்றன. மேடை போட்டு அரசியல் கூட்டம் நடத்தி பிரச்சாரம் செய்து கூட்டம் கூட்டிய காலம் இன்று கடந்து விட்டது.
புறா காலில் செய்தி கட்டி தூது அனுப்பிய காலம் போய் இன்று குருவி (Twitter) விடும் தூது தான் சந்து பொந்திலிருக்கும் மக்களையெல்லாம் சென்றடைகின்றது.
டிவிட்டர் (Twitter), பேஸ்புக் (Facebook), பிளாக் (Blog) போன்ற வலைத்தளங்கள் இன்று சமூக மாற்ற காரணிகளாக திகழ்கின்றன. சீனாவின் ஏகாதிபத்தியம் இதுப்போன்று கேள்விக் குள்ளாக்கப்படக் கூடாது என்பதற்காக சீன அரசு சில குறிப்பிட்ட வலைத்தளங்களை தடைசெய்ததை நாம் அறிவோம்.
வலைகளை இன்னும் ஆழத்தில் போடுங்கள் ! புரட்சி அரும்பட்டும் ! புதிய பாரதம் பூக்கட்டும் !